எங்கே என் வாடிக்கையாளர்? – 1
உள்ளே நுழைவதற்கு முன்…
எங்கே என் வாடிக்கையாளர்’ என்கிற தலைப்பில் என்ன செய்யப்போகிறோம், என்ன பேசப்போகிறோம் என்கிற எதிர்பார்ப்பை நான் கட்டமைக்க விரும்புகிறேன்.
நான் பேசப்போவது என் அனுபவத்தை.

எப்படி தொழில் தொடங்கினேன், அதை எப்படி விரிவு படுத்தினேன்,இன்னும் என்னென்ன செய்ய இருக்கிறேன், உண்மையில் நான் செய்து கொண்டிருப்பது என்ன? , தொழில் தொடங்கும் ஆர்வமுள்ளவர்கள் எங்கே, எப்படி ஆரம்பிப்பது?
இதில் நான் என்னென்ன கற்றுக்கொண்டேன், நான் எங்கிருந்தெல்லாம் உள்ளீடுகளை (input ) எடுத்துக்கொண்டேன், என்ன பாடங்கள் கற்றுக்கொண்டேன், தோல்விகளை எப்படி சமாளித்தேன், வடற்று என்பது உண்மையில் என்ன?, இது பற்றி எல்லாம் தொடர்ந்து பேச இருக்கிறேன்.
இதனால் ஒரு பயன். நான் சொல்லச்சொல்ல, எனக்கும் அது ஒரு பாடமாக அமையும் வாய்ப்பு இருக்கிறது. அதுவும் ஒரு கற்றல் முயற்சியே.
உங்களுக்கும் இது நிச்சயம் உதவும். தொழில் தொடங்கும் ஆர்வம் இருப்பவர்கள், நாளைக்கு தொடங்க இருப்பவர்கள் மற்றும் எப்போதும் ஆர்வத்திலேயே இருந்து என்றாவது ஒருநாள் ஆரம்பிக்கலாம் என்று என்னைப்போல் திடீரென்று தொழில் தொடங்க இருப்பவர்களுக்கும் நிச்சயம் ஒரு குறிப்பாவது அவர்களுக்குப்பயன்படும் .
இந்தத்தொழிற்பயணம் ஒரு வித்தியாசமான அனுபவம்.
நானும் உங்களைப்போல்தான். ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்து அல்லது அதில் இருந்து ஒரு படி மேலே போய் உயர் நடுத்தர வர்க்கத்து மனோபாவம் கொண்ட ஆள்.
ஆனால், ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் எப்போதும் உண்டு. அப்படி சாதித்ததுதான், நான் கல்லூரி படிக்கும்போது ஆனந்தவிகடனில் “மாணவப்பத்திரிகையாளனாக” சேர்ந்தது.
அதை ஏன் சாதனை என்று சொன்னேன் என்றால் அது என் எழுத்தால் என் கற்பனையால் நாலு பேர் என் எழுத்தையும் வாசிக்கக்கூடும் என்கிற நம்பிக்கையால் அதை சாதனை என்று சொன்னேன்.
அது ஒரு மிகப்பெரிய ஆசுவாசம். அங்கிருந்து எப்படி மேல் எழும்புவது, எப்படி சாதனையின் சிகரத்தை அடைவது என்று யோசித்து எல்லாரும் போகும் 9 to 5 வேலையைத்தேர்ந்தெடுத்து, அங்கிருந்து எங்கேயும் போக முடியாமல் மாதத்தவணையில் வாழ்க்கை சிக்கி …அது ஒரு பதினாறு வருடங்கள் ஓடி விட்டன.
இனியும் அப்படி இருந்தால் என்ன ஆகும் என்கிற நினைப்பே ஒரு பயத்தைக்கொடுத்தது. இருந்தாலும் தயக்கம் தடுத்தது.
தள்ளிப்போடுதல் (procrastination ) – வாழ்க்கையில் நாம் எல்லாரும் செய்யும் மிகப்பெரிய துரோகம். நம் வாழ்க்கைக்கும் நம் சந்ததிக்கும்.
நானும் செய்து கொண்டிருந்தேன்.
திடீரென்று ஒரு நாள் – அது ஒரு அமெரிக்க மதிய நேரம். எல்லாவற்றையும் உதறிவிட்டு “Career Mudhra ” (கேரியர் முத்ரா) என்ற பெயர் என்னை முழுவதுமாய் ஆட்கொண்டது.
1. எனக்கு எப்படி எங்கே ஆரம்பிப்பது என்று எதுவும் தெரியாது.
2. என்ன செய்யப்போகிறேன் அதுவும் தெரியாது.
3. தொழில் என்ற வார்த்தை எனக்கு மிகவும் புதிது. என் வாழ்க்கைக்கும் மிகப்புதிது.
இருந்தாலும் அந்த செயல் ஆரம்பமானது.
செயல் – ஆகச்சிறந்த சொல்.
-இப்படித்தான் நான் தொழில் தொடங்க நேரிட்டது ஒரு விபத்து போல. அது என்ன விபத்து? எனக்கு என்ன நடந்தது? உண்மையில் நடந்தது விபத்தா அல்லது நானே கற்பனை செய்து கொண்டேனா?
அதற்கான விடை, ஒரு சரணடைதலில் கண்டேன்.
அது என்ன?
அடுத்து பார்க்கலாம்!