ஒரு கவிஞனின் கைகளை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் பற்றிக்கொள்ளலாம். அவனின் வார்த்தைகளாகவோ, அல்லது கவிதைகளாகவோ அல்லது பேச்சுக்களாகவோ அல்லது அவனுடைய உரையாடல்களாகவோ…எப்படி வேண்டுமானாலும் அவனின் ஆறுதல் உங்களுக்கு உண்டு என்பதை உறுதியாகச்சொல்லிவிடலாம்.
அப்படித்தான் கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்களும். அவரின் கவிதைகள் என் வாழ்க்கையில் பல நெருக்கடிகளில் ஆறுதல் மருந்தாக இருந்திருக்கின்றன. என் ஒவ்வொரு நொடியையும் எதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு வார்த்தைகளால் ஒருவன் காட்சிப்படுத்திக்கொண்டிருக்கிறான் என்று தோன்றும் அளவுக்கு (எல்லோருமே ஒருவகையில் அதை உணர்ந்த்திருப்போம், அவரின் கவிதைகளை வாசிக்கும்போது) அத்தனை நிதர்சனமாக இருக்கும்.
என் புதிய புத்தகமான “பணம் – உங்கள் பிறப்புரிமை” பிரதியோடு இதை நீங்கள்தான் வெளியிட வேண்டும் என்று சொன்னபோது, எந்தவிதத்தயக்கமும் இல்லாமல் ஏற்றுக்கொண்டார்.புதியவர்களை அவர் ஆதரிக்கும் விதமும்…புதிய வாசகர்களை உருவாக்குவதிலும் புதிய எழுத்தாளர்களை வளர்த்தெடுப்பதிலும், எப்போதும் மனுஷ்யபுத்திரன் முன்னோடி என்பதை இன்று நேரில் கண்டேன்.
கவிஞன் எப்போதும் கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறான்.
நாம் அவனிடம் பெற்றுக்கொண்டேதான் இருக்கிறோம்.”மிக்க நன்றி” என்று சொல்வதை விட வேறென்ன செய்துவிடமுடியும்?நன்றி சார்!


