சீனிவாசன் இராமானுஜம்

முன்னுரை:
இந்த மூன்று கேள்விகள் மிக முக்கியம் என்று நான் கருதுகிறேன்.
1. எதற்காக இந்தப்புத்தகம் உங்களுக்கு?
2. இது எந்த வகையில் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்?
3. இதை நான் ஏன் எழுத வேண்டும்?
மூன்றாவது கேள்விக்கான பதிலை பின்னுரையில் சொல்லி இருக்கிறேன். அந்தரங்கமாக என்னைப்பற்றிப் பேசி இருக்கிறேன், அதாவது தன் வரலாறு (Autobiography ) போல இருப்பதால் அதைப்பின்னுரையில்சேர்த்திருக்கிறேன். அதைப்பின்னுரை என்று சொல்வதைவிட “புண்ணுரை” என்று சொல்வதே சாலச்சிறந்தது.
முதல் கேள்விக்கு வரலாம்.
எதற்காக இந்தப்புத்தகம் உங்களுக்கு?
என்னைப்பொறுத்தவரை புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஒரு வாழ்க்கையை விவரமாக சொல்லக்கூடியவை. அது எந்தவகை (Genre) ப்புத்தகமாக இருந்தாலும் சரி. அதில் ஒரு வாழ்க்கை இருக்கிறது.
நம் நீண்ட நாள் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும் வகையிலேயே ஒவ்வொரு புத்தகமும் இருப்பதை நான் கண்கூடாகப்பார்த்திருக்கிறேன்.
நாம் எல்லாவற்றையும் அனுபவித்துத்தான் தெரிந்துகொள்ளவேண்டுமெனில் இந்த ஒரு பிறப்பு போதாது. கற்றுக்கொள்வதிலேயே காலங்கள் கழிந்துவிடும். பிறகு கற்றுக்கொண்டதை எப்படி, எப்போது நாம் செயலுக்குக்கொண்டுவருவது?
அதெல்லாம் நடக்கக்கூடிய காரியமாக இருக்காது. அதனால்தான் கதைகள் உருவாயின. காவியங்கள் பிறந்தன. புராணங்கள் புதுப்புது நீதிக்கதைகளை மனிதனுக்கு போதித்தன.
இதிகாசங்கள் விட்டுப்போன வாழக்கையை ஒன்று விடாமல் தொட்டுத்தொடர்ந்து மனிதனுக்கு ஒரு சில பழக்க வழக்கங்களை கொண்டு போய் சேர்த்தன.
இவை எல்லாம் மனிதன் எந்தவகையில் எடுத்துக்கொள்கிறானோ அந்தவகையிலேயே அவன் வாழக்கை இருந்தது.
நல்லனவற்றிற்கு என்று எடுத்துக்கொண்டால் மனிதன் நல்ல பழக்கத்திற்கு அடிமையானான்.
தேவையில்லாத சிந்தனைகளுக்கு இடம் கொடுத்தால், நேர்மறை எண்ணங்களுக்கு எதிராக இருந்தால், எதிர்மறைப் பழக்கவழக்கத்திற்கு அடிமையானான்.
எந்தப் பழக்கமாயினும் அவன் வாழக்கை கொடுக்கும் அனுபவப்பாடத்தைத்தான் தன் வாழ்நாள் முழுக்க சுமந்து செல்கிறான். அது பெரும்பாலும் பெரியோர்கள் விட்டுப்போன கதைகளுக்கு அல்லது அது சொல்லும் நீதிக்கருத்துகளுக்கு நூறு சதவீதம் ஒத்துப்போவதால் தன் அடுத்த தலைமுறைக்கு அதையே பின்பற்றும்படி சிபாரிசு செய்துவிட்டுப்போகிறான்.
இப்படித்தான் நீதிக்கதைகள் உருவாயின. போதனைகள் உருவாயின. புத்தகங்கள் உருவாயின. திரைப்படங்கள் உருவாயின.
ஒரு கதை; பல முகங்கள்; என்பது போலத்தான் இதுவும்.
நமக்கு எந்தவித வடிவம் பிடித்திருக்கிறதோ அந்தவடிவத்தில் நாம் பார்க்க, கேட்க, படிக்க ஆரம்பிக்கிறோம்.
இங்கிருந்தே நமக்குப்பழக்கங்கள் உருவாகின்றன.அல்லது பழைய பழக்கங்களை அழித்துவிட்டு நமக்குத்தேவையான புதிய பழக்கங்களை உருவாக்கிக்கொள்கிறோம். அல்லது நிறுவிக்கொள்கிறோம்.
இந்தப்புத்தகம் உங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தைத்தான் தர முனைகிறது.
அதாவது, நம் சிந்தனைகளை மாற்ற முயற்சிக்கிறது.
எதற்காக நம் சிந்தனை ஓட்டத்தை மாற்ற முனைய வேண்டும்? இந்தக்கேள்வி எழலாம்.
நாம் எப்போதும் நமக்கான வாழக்கையை வாழ முயற்சிப்பதில்லை.
யாரோ எங்கோ யாருக்காகவோ எப்படியோ வாழ்ந்த வாழ்க்கையைத்தான் நம் ரசனைக்குள் முடிந்துவைக்க முயற்சிக்கிறோம்.
யாரோ ஒருவர் சாப்பிட்டுவைத்த மீதமான உணவை நாம் சாப்பிடுவதுபோலத்தான் நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறோம். பிறகு அது “செரிமானம் ஆகவில்லை ” என்று வயிற்றைத்தடவிப்பார்த்துக்கொள்கிறோம்.
யாரோ ஒருவருடைய சரியில்லாத சட்டையை நாம் எடுத்துப்போட்டுக்கொண்டு “இது எனக்கு சரியில்லை” என்று புகார் சொல்கிறோம்.
எந்த நாட்டிலோ அவர்கள் தட்பவெப்பநிலைக்கேற்ப சாப்பிடும் உணவு முறையை அதற்குக் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத ஒரு வெயில் நாட்டில் விலை உயர்ந்த சாப்பாடு என்று சொல்லி சாப்பிட முயற்சி செய்து விலை உயர்ந்த நோய்களை நாம் வாங்கிக்குவித்துக்கொள்கிறோம்.
ஆக, நாம் எப்போதும் நமக்கான வாழ்வு எது என்று கண்டடைவதில் நம் வாழ்நாளெல்லாம் செலவு செய்கிறோம்.
பிறகு நமக்கான வாழ்வு இது என்று தெரிய வரும்போது விலைமதிப்பில்லாத நம் உயிர் நம்மிடம் இருப்பதில்லை; அப்படியே உயிர் இருந்தாலும் அதற்கான உடல் வலிமை நம்மிடம் இருப்பதில்லை.
உடல் வலிமை இருந்தாலும் மன வலிமை இருப்பதில்லை.
இப்படி சிக்கலான முடிச்சுக்குள் வாழக்கையை நாமே நுழைத்துவிட்டுப் பிறகு, முடிச்சை அவிழ்க்கமுடியவில்லை என்று பிதற்ற ஆரம்பிக்கிறோம். இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால், இதுதான் முடிச்சு என்றே நமக்குத்தெரியவில்லை என்புதுதான் நம் பரிதாபமான மனநிலை.
———————–
இந்த மனநிலையில் இருந்து உங்களை விடுவிக்க இந்தப்புத்தகம் நிச்சயம் முயலும். அந்த விழிப்புணர்வை (Creating Awareness ) நிச்சயம் இந்தப்புத்தகம் உங்களுக்கு ஏற்படுத்தும்.
அதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.
நாம் நமக்கான வாழ்க்கையை வாழ்வதுதான் மற்றவர்களுக்கு மிகச்சிறந்த உதாரணமாக இருக்கும். மற்றவர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ, நமக்கே நாம் உதாரணமாக இருப்போம். அது நிச்சயமாக ஒரு நம்பிக்கை ஒளியை ஏற்றிவைக்கும்!
அந்த நம்பிக்கை ஒளியின் முதல் கீற்றை உங்கள் முகத்தில் இந்தப்புத்தகம் ஏற்படுத்தும் என்பதை நினைக்கும்போதே எனக்கும் அந்த மகிழ்ச்சி தொற்றிக்கொள்கிறது.
என்னால் அதைக் காட்சிப்படுத்திப்பார்க்க முடிகிறது.
உங்களுக்கு இந்த முதல் கேள்வியில் இருந்து அடுத்த கேள்வி எழலாம்.
எந்த நம்பிக்கையை இந்தப்புத்தகம் விதைக்க இருக்கிறது?
நாம் அதீதமாக அடுத்தவர்களுக்காக வாழ்ந்து வாழ்ந்து நம் சுய சிந்தனையை இழந்துவிட்டோம்.
அதில் ஒன்று; பணம்.
நாம் பணத்தை அடைவதை நோக்கியே ஓடிக்கொண்டிருப்போம். ஆனால், பணம் நம் நிம்மதியைக்கெடுத்துவிடும் என்று வியாக்கியானம் பேசிக்கொண்டிருப்போம்.
நாம் செய்யும் வேலையில் கொஞ்சம் சம்பளம் குறைந்துவிட்டாலும் நம்மை இந்த நிறுவனம் அல்லது நபர் இழிவுபடுத்திவிட்டார்கள் என்று வேறு வேலையை நோக்கி ஓடிவிடுவோம். அனால், பணம் எனக்கெல்லாம் ஒரு பெரிய பொருட்டே அல்ல’ என்று கருத்து சொல்லிக்கொண்டிருப்போம்.
பணம் சேர்த்துவைப்பவர்களைப்பார்த்து நாம் அதிகம் நமக்குள்ளே பொருமிக்கொள்வோம். கஞ்சன் என்று அவர்களுக்கு ஒரு பெயர் வைத்து அழைப்போம். ஆனால், நம் பணத் தேவைக்கு அவர்கள் வீட்டுவாசலில்தான் போய் நின்று கையேந்துவோம். எவ்வளவு வட்டியானாலும் பரவாயில்லை’ என்று கேட்டுப்பணம் பெறுவோம். பிறகு அதிக வட்டி என்று கோர்ட்டு வாசலில் போய் நிற்போம்.
நம்முடைய மூடப்பழக்கவழக்கங்களில் ஒன்று;
பணம் சேர்ப்பது அல்லது அதிகமாக பொருள் சேர்ப்பது குற்றம்; பணக்காரர்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்லது குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள்.
இப்படித்தான் நம் பொதுப்புத்தி சொல்கிறது. அதைத்தான் மக்கள் ரசிக்கிறார்கள்; அதைத்தான் மக்கள் கேட்கிறார்கள்; அதைத்தான் மக்கள் நம்புகிறார்கள்.
பணம்; பணக்காரன் என்பவன் ஒரு நாட்டின் சொத்து; பொருளாதாரத்தின் முக்கியமான ஆணிவேர்களில் ஒருவன் எனும் நம்பிக்கை நமக்குப் பெரும்பாலும் இருப்பதில்லை.
இதைத்தான் நம் சமூகம் விரும்புகிறது அல்லது இதைத்தான் நம்ப விரும்புகிறது.
ஆனால், நம் எல்லோருக்குள்ளும் பணக்காரர் ஆகும் வேட்கை மட்டும் குறைந்தபாடில்லை. ஒரு புறம் அது வேர் விட்டு வளர்ந்து மரமாகிக்கொண்டே இருக்கிறது.
மற்றொரு புறம் அதையே புறம்தள்ளிப்பேசுகிறது.
இந்த “இரட்டை மனநிலை” ஒரு வியாதி. ஒருவிதமான நோய்.
அது எனக்கும் இருந்தது; உங்களுக்கும் இருந்திருக்கும் அல்லது இப்போதும் இருக்கும் என்று நினைக்கிறேன்.
“எல்லோரும் பணக்காரர் ஆகும் சாத்தியம் சத்தியமாய் இருக்கிறது” என்னும் நம்பிக்கை விதையைத் தூவுவதில் இந்தப்புத்தகம் தனித்து நிற்கிறது.
இந்த விதை வளர்ந்து ஆலமரமாகும் எனும் நம்பிக்கையும் எனக்குள் இருக்கிறது.
——————
இரண்டாவது கேள்வி: இந்தப்புத்தகம் எந்தவகையில் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்?
இந்தப்புத்தகத்தின் அடிப்படை நோக்கம், தாரக மந்திரம் “நாம் பணக்காரர் ஆகலாம்”. சிலருக்காக இப்படி மாற்றிச்சொல்கிறேன்: “நீங்களும் (நாமும்) பணக்காரர் ஆகலாம்”.
ஏனெனில், அந்த நம்பிக்கைதான் இப்போது வேண்டும். எப்போதும் அது நம்முடன் இருந்துகொண்டே இருக்கவேண்டும். அந்தக் கங்கு அணையாமல் காப்பது நமது கடமை.
இந்தப்புத்தகத்தில் கூறியுள்ள அனைத்தையும் உடனுக்குடன் உங்கள் வாழ்வில் செயல்படுத்தினால் உங்கள் வெற்றியை யாராலும் தடுத்துநிறுத்தமுடியாது.
அதே சமயம், இந்தப்புத்தகத்தின் நோக்கமான நீங்களும் பணக்காரர் ஆகலாம்’ எனும் வாழ்வுரிமையை மீட்டு மறுபடி உங்களிடமே மீண்டும் தரும் என்று மிக திடமாக நம்புகிறேன்.
ஏனெனில், அது எனக்கு நடந்திருக்கிறது. அது உங்களுக்கும் நடக்கும். நடந்தே தீரும்.
நாம் எப்போதும் ஒரு செயலை உடனே ஆரம்பித்து விடுவோம். ஆனால், அந்த ஒன்றையே எப்போதும் நடத்திக்காட்டிக்கொண்டிருப்போம் என்று எந்தவித உத்தரவாதமும் நம்மிடம் இருப்பதில்லை. இருப்பதே இல்லை.
இங்கேதான் வெற்றியாளனுக்கும் ஒரு தோல்விபெறுபவருக்குமான முக்கியமான வித்தியாசம் இருக்கிறது.
ஒரு தொழில் செய்ய வேண்டும் என்று ஆரம்பித்தால், அதன் அடிஆழம் வரை சென்றுபார்த்துவிட்டு வரவேண்டும்.
பாதியிலேயே திரும்புவதுதான் தோல்விக்கான காரணிகளாக இருக்கின்றன.
அதைத்தான் ஆழமாக இந்த நூல் விவரிக்கிறது. உங்களுக்கு இதனுடைய அணுகுமுறை பிடித்திருக்கும் என்றே நினைக்கிறேன்.
எனக்கே இந்தப்புத்தகம் மிகவும் பிடித்திருக்கிறது. (இது அதீத நம்பிக்கை அல்ல; இதன் உள்ளடக்கம் (content) மிகக்கச்சிதமாகப்பொருந்தி இருக்கிறது.)
உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
பணம் உங்கள் பிறப்புரிமை! பணக்காரன் உங்கள் வாழ்வுரிமை!
நீங்கள் பணக்காரராக என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகள்!
படித்துவிட்டுச்சொல்லுங்கள். கருத்துக்களைப்பரிமாறிக்கொள்ளுங்கள்.
நன்றி!
சீனிவாசன் இராமானுஜம்
Email : writersrinivasan@gmail.com
www.moneybirthright.com 14 JUN 2021 6:30 PM